கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் போர்டிகோவில் புகுந்த எம்எல்ஏ கார்- 3 பேர் காயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே என்.என்.சாவடியில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் விபத்துக்குள்ளானது.
ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், இன்று காரைக்கால் மாவட்டம் சென்று விட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வழியாக இனோவா கிரிஸ்டா காரில் சென்றுள்ளார். என்.என் சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும்போது காளியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக சாலையில் எருக்கடாஞ்சேரியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன்(18), 12ஆம் வகுப்பு மாணவன் செல்வகுமார்(16) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் காளியப்பநல்லூர் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ள சாலையில் இருந்து வந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறி திரும்பியதாக கூறப்படுகிறது. அப்பொழுது ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் கார் திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது இருசக்கர வாகனத்தின்மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் கார்த்தி என்பவர் வீட்டின்மீது மோதி போர்டிகோவில் புகுந்தது.
போர்டிகோ பகுதி மற்றும் வீட்டில் நிறுத்தியிருந்த கார், இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் கால் மற்றும் உடலில் காயமும் செல்வகுமாருக்கு வலது முழங்காலுக்கு கீழ் எலும்பு முறிவும் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தான்வந்த அரசு வாகனத்தில் இருவரையும் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
இந்த விபத்து தொடர்பாக கார்மோதி சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் கார்த்தி பொறையார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.