வேலூரில் செப்.17-இல் திமுக முப்பெரும் மற்றும் பவள விழா- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

செப்டம்பர் 17 அன்று தீரமிக்க வேலூர் மாநகரில் நடைபெறவுள்ள கழகத்தின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Mkstalin

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் முன்பாக, “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது” என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். 1949-இல் அவர் உருவாக்கிய இயக்கம், அண்ணாவின் கொள்கைத் தம்பிகளால் வளர்க்கப்பட்டு, அவரது தம்பிகளில் தலையாய தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அரை நூற்றாண்டுக்கு மேல் கட்டிக் காக்கப்பட்டு, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கழகம் தனது 75-ஆம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

ஒரு மாநிலக் கட்சி முக்கால் நூற்றாண்டு காலம் தன் மக்களின் நலன் காக்க உறுதியாகப் போராடியும், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியும், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும் இன்று இந்தியாவை வழிநடத்தக்கூடிய வகையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் திகழ்கிறது என்றால் அந்தப் பெருமை நம் உயிராகவும், உதிரமாகவும் திகழ்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உரியது. இந்த வரலாற்றுப் பெருமையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் அளப்பரியது.

mkstalin

உங்களில் ஒருவனான நான் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களால் வரவேற்கப்பட்டேன். ஜனநாயக விரோத - மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்று இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கியபோது ஏளனம் பேசினார்கள். ‘இது ஃபோட்டோ செஷன்’ என்று நகையாடினார் ஒன்றிய உள்துறை அமைச்சர். நகையாடியவர்களின் கண்களில் பயமாடுவதை பெங்களூரு நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது. அதன் பிறகு, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பை மாநகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டபோது, பா.ஜ.க அரசின் பயத்தின் விளைவை சமையல் கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது.

10 ஆண்டு காலமாக இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி, கடும் விலையேற்றத்தால் மக்களை வதைத்து, அவரவர் தாய்மொழியையும் மாநில உரிமைகளையும் நசுக்கி, பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு உணர்வுகளை ஒடுக்கி, ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரே உணவு என்ற சர்வாதிகாரத்தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிற வாக்காளர்களும்தான்.

MKStalin

இந்த ஒற்றுமை உணர்வை ஒருமுகப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதால் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர். இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாகத் திகழ்கிறது தி.மு.க எனும் பேரியக்கம்.

சென்னை மண்ணடி பவளக்காரத் தெரு, 7-ஆம் எண் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராயபுரம் ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இயக்கம், தனது பவள விழாவைக் கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், சமூகநீதி - மாநில உரிமை - பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது என்றால் இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

தந்தை பெரியாரின் இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சென்று, ஜனநாயக முறையில் அவற்றை நடைமுறைப்படுத்தத் தனி இயக்கம் கண்டவர் பேரறிஞர் அண்ணா. அந்த இலட்சியங்களை நிறைவேற்ற அண்ணாவுக்குத் துணையாகவும், அண்ணாவுக்குப் பிறகு கழகத்தின் தலைவராகவும் இருந்து நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். அவர்களின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகளாம் உங்களின் பேராதரவுடன் கழகத்தின் பயணம் உங்களில் ஒருவனான என் தலைமையில் தொடர்கிறது.

mkstalin

இலட்சியங்களை நிறைவேற்றும்போது, அவற்றுக்குத் தடையாக - எதிராக நிற்கின்ற கொள்கை எதிரிகளை அடையாளம் கண்டு ஜனநாயகக் களத்தில் வீழ்த்துவதே நம் முன் நிற்கும் முதன்மையான பணி. வெற்றி - தோல்விகளைக் கடந்து இலட்சியப் பாதையில் உறுதி குலையாமல் பயணிக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். களத்தில் நாம் பெற்ற விழுப்புண்கள் அதிகம். கொடுத்த விலை இன்னும் அதிகம். ஆனால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு, முதுகு வளையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, ‘நான் தி.மு.க.காரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு’ என்று கம்பீரமாகச் சொல்கின்ற துணிவும் வலிவுமே கழகத்தினரின் அடையாளம்.

அந்த கம்பீரத்துடன், பேரறிஞர் அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75-ஆவது ஆண்டினை - பவள விழாவினைக் கொண்டாட இருக்கிறது. அதுவும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில். இதைவிட என்ன மகிழ்ச்சி நமக்கு இருக்க முடியும்?

பெரியார் – அண்ணா - கழகம் பிறந்த செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவினைச் சிறப்பாக நடத்தி, கொள்கை முழக்கம் செய்யும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், கழகத்திற்காகப் பாடுபட்ட இலட்சிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றுவது தலைவர் கலைஞர் உருவாக்கிய நடைமுறை - நன்முறை. இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் கழகத்தின் முன்னோடிகளும் தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக இருந்து முப்பெரும் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவார்கள். இளைஞரணி சார்பில் பெருமைமிகு பேரணிகளை நடத்தியதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

தலைவர் கலைஞரின் வழியில் இந்த ஆண்டும் கழகம் காத்த இலட்சிய வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருது மயிலாடுதுறை திரு.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் திரு.க.சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், பாவேந்தர் விருது தென்காசி திருமதி. மலிகா கதிரவன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது பெங்களூரு திரு. ந.இராமசாமி அவர்களுக்கும் செப்டம்பர் 17 அன்று தீரமிக்க வேலூர் மாநகரில் நடைபெறவுள்ள கழகத்தின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் வழங்கப்படும். கழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுக்கான விருதுகளும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.

mkstalin

வீரம் செறிந்த வேலூரின் அடையாளமாக கோட்டை இருப்பதுடன், வேலூர் எப்போதும் தி.மு.கழகத்தின் கோட்டைதான் என்பதைப் பல்வேறு களங்களில் நிரூபித்திருக்கிறது. கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களை நமக்கு வழங்கியுள்ள கோட்டை. தனது மாணவப் பருவத்திலேயே மொழிப்போர்க் களம் கண்டு, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாக, அவரின் நிழலாக, கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, கொள்கைத் தடம் மாறாமல் பயணிக்கின்ற பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில் வேலூரில் முப்பெரும் திருவிழா - கழகப் பவள விழா நடைபெறுகிறது. விழாவிற்கான பணிகளை மாவட்டக் கழகச் செயலாளர் நந்தகுமார் அவர்களும் கழக நிர்வாகிகளும் இணைந்து சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு தொடக்கமும், கழகத்தின் பவள விழா தொடக்கமும் இணைந்த இந்த ஆண்டில், வேலூரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு உடன்பிறப்புகளாம் உங்களை அழைப்பதில் உங்களில் ஒருவனான நான் அகம் மிக மகிழ்கிறேன்.  2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கைப் படையாகத் திரண்டு வருக. கழகம் காப்போம் - மொழியைக் காப்போம் - மாநில உரிமை காப்போம் - மக்கள் வாழும் வகையில் நாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் தருக.

நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திடச் சூளுரைக்கும் விழாவாக வேலூர் முப்பெரும் விழா அமையட்டும். அடுத்த ஆண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவும் - கழகப் பவள விழா நிறைவும் வெற்றிக் கொண்டாட்டங்களாக மலரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.