பதினெட்டே வயதில் உலக செஸ் சாம்பியன்- குகேஷுக்கு குவியும் வாழ்த்துக்கள்

 
s s

உலக சதுரங்க வாகையர் பட்டத்தை மிகவும் இளம் வயதில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பதினெட்டே வயதில் உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றிருக்கும் திரு. குகேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்! தங்களது இந்தச் சிறப்புமிகு சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளமான மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், மற்றுமொரு உலக சாம்பியனை உருவாக்கி, செஸ் தலைநகரம் என்ற சிறப்பிடத்தை உலக அளவில் சென்னை தக்கவைத்துக் கொள்ளவும் அது துணை புரிந்துள்ளது, தமிழ்நாடு உங்களை எண்ணிப் பெருமைகொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் நடைபெற்று வந்த FIDE உலக சதுரங்க வாகையர் பட்டப் போட்டிகளின் 14-ஆம் ஆட்டத்தில், சீனத்தைச் சேர்ந்த தற்போதைய வாகையர்   டிங் லிரெனை  வீழ்த்தி  வாகையர் பட்டத்தை வென்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு  எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 18 வயதில் இந்த பட்டத்தை வென்றதன் மூலம், கேரி காஸ்பரோவின் சாதனையை முறியடித்து உலகின் இளம் வயதில்  உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றவர் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.  இதன் மூலம் தமிழ்நாடு தான் சதுரங்க  வாகையர்களின் விளைநிலம் என்பதை  மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார்.  சதுரங்க உலகில் ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ள குகேஷ் மேலும் பல பட்டங்களை வெல்லவும், சாதனைகளைப் படைக்கவும்  எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PT

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடின பயிற்சி, விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை ஆகிய மூன்றையே மூலதனமாக கொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீரர் குகேஷ் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.