"இப்படியே போனால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாகக் கூட இருக்க முடியாது" - அதிமுகவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

 
ச் ச்

தாங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள், இதை உருவாக்கியவர்கள் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக பாக முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “எங்கே போனாலும் SIR குறித்து தான் பேசுகிறார்கள். மக்கள் அனைவரும் தாங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதை உருவாக்கியவர்கள் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் தான். விசாரணை அமைப்புகளை வைத்து பல்வேறு மாநிலங்கள் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இன்னல்களையும் துன்பங்களையும் தந்து கொண்டு உள்ளார்கள். இப்போது தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வெளிப்படையாகவே வாக்கு திருட்டை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உண்மையான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் விடுபட்டுவிட கூடாது என்பதற்காக தான் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் திமுக சார்பில் போராடி வருகிறோம். ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி இதுகுறித்து ஆலோசித்தோம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். கடந்த 11 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தி உள்ளோம். வரும் தேர்தலில் தேர்தல் வெற்றிக்காக மட்டும் அல்ல, மக்களின் வாக்குரிமையை காக்கும் கடமையும் நமக்கு உள்ளது. என்னை விட விழிப்பாக இருக்க கூடியவர்கள் நீங்கள் தான் .நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. ஒரு மாத காலத்துக்குள் எல்லோருடைய வாக்காளர் பட்டியலும் கணக்கிடப்பட உள்ளது. கணக்கிடும் பணிக்காக வழங்கும் படிவங்கள் பூர்த்தி செய்வதற்குள் தலை சுற்றுகிறது. கொளத்தூர் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்ட வெற்றி தான். அதில் சந்தேகம் இல்லை. SIR நடவடிக்கைக்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது அதிமுக. கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு SIR தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.  இப்படியே போனால் அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக்கட்சியாகக் கூட இருக்க முடியாது” என்றார்.