"வரி கொடுக்க முடியாதுன்னு சொல்ல ஒரு நொடி போதும்.."- மத்திய அரசை மிரட்டும் ஸ்டாலின்

கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண முடிவதே விடியலின் அடையாளம் அறிவிக்காத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மகளிர் முன்னேற்றத்திற்கு சிறு தடை கூட ஏற்படக்கூடாது. மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வரமுடியாது. தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று 'தமிழ்' உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியைத் தருவோம் என BLACKMAIL செய்வது அரசியல் இல்லையா? கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிக்கொள்கை கொண்ட இந்திய நாட்டை ஒருமொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிப்பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்துக்கான நிதியை கொடுக்க இன்னொரு திட்டத்தை ஏற்கச் சொல்வது அரசியல் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.