“இது மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்த ஆட்சி”- மு.க.ஸ்டாலின்

 
“இது மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்த ஆட்சி”- மு.க.ஸ்டாலின்

கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் சிங்கப்பெண்கள் படை என ரீல்ஸ் போடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


காணொளி வெளியிட்டு மதுராந்தகம் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுராந்தகம் தொகுதி வளர்ச்சிக்காக, மக்களுக்காக உண்மையாக இருந்து பணியாற்றிட திமுக சார்பில் போட்டியிடும் மக்களின் குரலாக, உண்மைக்கான பாதுகாவலனாக இருக்கும், ஊடகங்களில் ஒலிக்கும் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்திடுங்கள். முதலமைச்சர் முதல் தவெக அமைச்சர்கள் வரை யாருமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் எனக்கூறி வாக்கு சேகரிப்பதில்லை. ஏனென்றால் தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்ய அமைந்த ஆட்சி அல்ல, மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்த ஆட்சி. 

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லப்போகிறார்கள். விலைவாசியை கட்டுப்படுத்தச் சொன்னால், முதலமைச்சர் ஜோசியரின் ஆலோசனையைக் கேட்டு ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டுவார். விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அதைப்பற்றி கவலைப்படாமல் லண்டன் சென்று கார் ரேஸ் பார்ப்பார். கொத்துக் கொத்தாக கொலைகள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் சிங்கப்பெண்கள் படை என ரீல்ஸ் போடுவார். இப்போதைக்கு அவருடைய கவனமெல்லாம் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதுதான்” என்றார்.