சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்- மு.க.ஸ்டாலின்

 

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன், நெஞ்சம் நெகிழ்ந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று  சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை மு.க.ஸ்டாலின் சந்தித்து, இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

Image

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது சிங்கப்பூரின் தந்தை லீக்வான்யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனக் கூறினார்.

Image

இந்நிலையில் சிங்கப்பூர் பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன். தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடையே உரையாற்றினேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்க திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.