”நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும், எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில், கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனின் தலைநகரமாம் கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக ரூ. 22 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறையின் கீழ் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டான், கீழடி இணையதளத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், 'இரும்பின் தொன்மை' எனும் நூலையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் முதன்மை செயலாளர் சந்திரமோகன், தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!@TThenarasu https://t.co/umbpC8ZmLs
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் எக்ஸ் தள பதிவை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.