"கட்சி வேறுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி"- மு.க.ஸ்டாலின்

கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது. 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Thankful to all parties that stood together as a single unit in the All-party Meeting convened by the Government of Tamil Nadu, setting aside the political differences to send a clear and uncompromising message on the unjust #Delimitation initiative.
— M.K.Stalin (@mkstalin) March 5, 2025
The resolutions passed today… pic.twitter.com/d3fZnKdA4z
இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ண்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரினார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள் – பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழ்நாட்டின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன. கலந்து கொண்டவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்திற்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிந்தார். அத்தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களை ஒருங்கிணைத்து “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.