விருதுநகர் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்

 
M.K.Stalin

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர்‌ மாவட்டம்‌ மற்றும்‌ வட்டம்‌, வச்சக்காரபட்டி கிராமத்தில்‌ இயங்கிவந்த தனியாருக்குச்‌ சொந்தமான பட்டாசு ஆலையில்‌ இன்று (24-01-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்‌ விருதுநகர்‌ மாவட்டம்‌, சிவகாசி வட்டம்‌, முதலிபட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.வீரக்குமார்‌ (வயது 55) த/பெ.கிருஷ்ணசாமி மற்றும்‌ விருதுநகர்‌ வட்டம்‌, கன்னிசேரி புதூர்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.காளிராஜ்‌ (வயது 20) த/பெ.பாண்டியராஜ்‌ ஆகிய இருவரும்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்‌ என்ற துயரமான செய்தியைக்‌ கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்‌.  

மேலும்‌, இவ்விபத்தில்‌ பலத்த காயமடைந்து விருதுநகர்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றவரும்‌ கன்னிசேரி புதூர்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.சரவணக்குமார்‌ (வயது 24) த/பெ.செந்தில்‌ மற்றும்‌ இனாம்‌ ரெட்டியபட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.சுந்தரமூர்த்தி (வயது 17) துபெ.சுப்புரஜ்‌ ஆகிய இருவருக்கும்‌ சிறப்புச்‌ சிகிச்சை அளிக்கவும்‌ அறிவுறுத்தியுள்ளேன்‌.  இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம்‌ ரூபாயும்‌, பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.