"இன்றும் மிசா தழும்பு என் கையில் உள்ளது"- கலங்கியபடி பேசிய மு.க.ஸ்டாலின்
சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி, மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவு செய்து உங்களை பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள். படித்தப்பின் அதிலுள்ள உண்மையை கண்டுபிடித்து அதுதொடர்பாக நடவடிக்கை எடுங்கள். நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஒரு தேர்தல் தோல்விக்கு ஒரு கட்சி காணாமல் போய்விடுகிறது. ஆனால் 75 ஆண்டுகாலம் கொண்ட கொள்கைக்காக பாடுபட்டுக் கொண்டிருக்க கூடிய இயக்கம் திமுக. ஒரு மாநில கட்சி எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி நாம் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக. நமக்கெல்லாம் துணையாக அண்ணன் ஆற்காட்டார் இருந்து கொண்டிருகிக்கிறார்.. சிறைச்சாலையில் ஒவ்வொரு நாளும் அறிவுரை வழங்கியவர்.. இன்றும் மிசா தழும்பு.. என் கையில் உள்ளது.. வைரம் பாய்ந்த தொண்டர் அண்ணன் ஆற்காட்டார்” என்றார்.

