“வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல்”- மு.க.ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் திமுகவின் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களின் வாக்குச்சாவடி மைய பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை, விழுப்புரத்தை சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களை 5 முறை அணுக வேண்டும். அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்குகள் கேட்க வேண்டும். வரலாற்றில் முதல்முறையாக தொழில்துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநாடு நாளை நடத்த உள்ளோம். அதிமுக ஆட்சியில் பாதாளத்தில் கிடந்த தமிழ்நாடு பொருளாதாரத்தை மீட்டு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளோம். சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்துள்ளோம் என மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மீதமுள்ள கோரிக்கைகளையும் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றுவோம் எனக் கூறுங்கள்.
திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல். இதுவரை வாக்களிக்காதவர்களை திமுகவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டியது உங்கள் பணி. 5 ஆண்டுகளில் சென்னைக்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம். கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை அமைத்துள்ளோம். சென்னையின் வளர்ச்சிக்கு இன்னும் பல திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் இந்த சாதனைகளைச் செய்துள்ளது” என்றார்.

