“அடக்க நினைப்பவர்களை அடங்கிப்போக வைப்பவர்கள் நாங்கள்”- மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரானலும், முதலமைச்சரானாலும் அண்ணா, கலைஞர் இருந்த இடத்தில், இந்த சாதாரண ஸ்டாலினை அமர்த்தியது நீங்கள்தான் என தொண்டர்களை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேசினார்.
சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில், நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'தளபதி 72' எனும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக தலைவரானலும், முதலமைச்சரானாலும் அண்ணா, கலைஞர் இருந்த இடத்தில், இந்த சாதாரண ஸ்டாலினை அமர்த்தியது தொண்டர்களே. மிரட்டுனா அடங்கிப்போறவங்க இல்லை. அடக்க நினைப்பவர்களை அடங்கிப்போக வைப்பவர்கள் நாங்கள். கூட்டணியில் விரிசல் வருமா என சிலர் எதிர்பார்க்கின்றனர். அது நடக்காது. கருத்தியல் கூட்டணியில் விரிசல் வராது. ஒற்றுமையை கண்டு சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
குழந்தைகளின் கல்விக் கனவை சிதைக்கின்ற காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல் பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்ககிட்ட இல்லையே. எங்களை என்ன மிரட்டினாலும் உங்களால் இந்தி மொழியை திணிக்க முடியாது. 2019 முதல் கொள்கை கூட்டணி அமைத்து, வெற்றி பெற்றுவரும் நாம், 2026ல் அடையப் போகும் வெற்றிக்கான தொடக்க விழா மேடை. கோபாலபுரம் நான் பிறந்த இடமாக இருந்தாலும், முழு தமிழ்நாடும் என்னை வளர்த்தது. 60 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கிராமம், நகர, குறுக்கு, நெடுக்கும், வெயில், மழை, இரவு, பகல், பசி், தூக்கம் பார்க்காமல் உழைத்து கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றியதால்தான் இன்று கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்” எனக் கூறினார்.