எந்த கொம்பனாலும் திமுக-ஐ வீழ்த்த முடியாது: மு.க.ஸ்டாலின்

 
MKStalin

2-வது இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2-வது இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. திமுகவின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞரணி என் தாய் வீடு, ஏனென்றால் என்னை வளர்த்து உருவாக்கியது இடம் இளைஞரணி தான். நமது தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. தெற்கில் ஒரு விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியா முழுவதிலும் விடியல் பிறக்கும்.

ஒரு காலத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் பிரதமர் மோடி. ஆனால் தற்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பாஜக சட்டம் இயற்றி வருகிறது. எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை. சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைதான் இன்று நாட்டிற்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த பேரிடர்களுக்கு ரூ.37,000 கோடி கேட்டோம், ஆனால் இதுவரை ஒரு பைசா வரவில்லை. நிதியை தருவதாக பிரதமர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் கூறியபோதும் இதுவரை நிதி வரவில்லை.

Image

மிகப்பெரிய பேரிடர் காலத்தில்கூட உதவுவதில்லை. நான் சொல்லி செய்கிறவன் அல்ல, சொல்லாததை செய்பவன், கலைஞரின் முழக்கம் என்பது 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்', எனது பாணி என்பது 'சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம். சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு! 'வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும்! இதுதான் நமது பண்பாடு. திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள்.

அனைவருக்குள்ளும் ஓடுவது சிவப்பு ரத்தமாக இருக்கலாம். தி.மு.க தொண்டனுக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு ரத்தம். இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு தணியாதவரை இந்த இயக்கத்தை மட்டுமல்ல, இந்த இனத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது. திராவிடம் என்பது சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை இணைந்தது. மொத்தத்தில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய கருத்துதான். மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிப்பது இல்லை. ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர்” என்றார்.