அதிமுகவின் உள்ளே வெளியே ஆட்டம் பாஜகவின் நாடகம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடுத்த மூன்று மாதங்களில் உடன்பிறப்புகள் உழைக்கும் உழைப்பில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க. அவர்கள் அழிவுவேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பா.ஜ.க. போட்டுக் கொடுத்த நாடகம்! பழனிசாமியின் பகல் வேஷத்தை அ.தி.மு.க. தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை! பா.ஜ.க. - அ.தி.மு.க. இவர்கள் இரண்டு பேரின் படுபாதக செயல்களை தடுப்பதுதான் நம் முன்னால் இருக்கும் முக்கியக் கடமை. மாநில சுயாட்சிக் கோரிக்கையை பொறுத்தவரை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை!
மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ - அதை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டால் போதும்! இதற்காகத்தான் தலைவர் கலைஞர் இராசமன்னார் குழுவை 1969-ஆம் ஆண்டு அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானமாகவும் நிறைவேற்றினார். 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம்! நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது! அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது – மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்!
தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை! மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் – ஏன், பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்! இதை இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின்.
இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒருகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டங்களை இயற்றுகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனைச் செய்வது இல்லை. எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி – நிதி அதிகாரத்தை முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.
மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. சமீபத்தில் வந்த பேரிடருக்கு, 37 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் ஒரு பைசா வரவில்லை. பிரதமர் வந்தார் - தருவேன் என்றார்; நிதி அமைச்சர் வந்தார் - தருவேன் என்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார் – தருவேன் என்றார்; உள்துறை அமைச்சரை நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் எம்.பி.க்கள் பார்த்தபோது அவரும் தருவேன் என்றார். ஆனால் இப்போது வரைக்கும் எதுவும் வரவில்லை! இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞரின் மண்!
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்1த முறை தமிழ்நாட்டைப் போலவே – இந்தியாவும் செயல்பட போகிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், என்ன செய்கிறார்கள்? கட்சிகளை உடைப்பது! எம்.எல்.ஏ.க்களை இழுப்பது! ஆளுநர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்த பார்ப்பது! சொல்லப்போனால், பா.ஜ.க.விற்கு வேட்டு வைக்க வேற யாரும் வேண்டாம். ஆளுநர்களே போதும்! அவர்களே அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்திடுவார்கள்! நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது! சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது! கூட்டாட்சியாக இருக்கும்! மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்! தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் ஆட்சியாக இருக்கும்! இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றும் ஆட்சியாக இருக்கும்! அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
தேர்தல் பணி தொடக்கமாக, சேலம் மாநாட்டுக்கு முன்பே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் பணிகளை முழுமையாக கண்காணித்து ஒருங்கிணைக்க நேரு, வேலு, பாரதி, தங்கம் தென்னரசு, தம்பி உதயநிதி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஐவர் குழு 40 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள நிர்வாகிகளை அழைத்து வெற்றிக்கான வியூகத்தைத் தருவார்கள். அறிக்கைத் தயாரிக்கும் குழு முக்கிய நகரங்களுக்கு வந்து மக்கள் கருத்துகளைக் கேட்பார்கள். கூட்டணியைப் பற்றியும் - யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி!
பல்லாயிரக்கணக்கான வாக்குச் சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான நிர்வாகிகள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்று நாளை முதல் புறப்படுங்கள். வருகின்ற மூன்று மாத காலம் நீங்கள் உழைக்கும் உழைப்பில்தான் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டு எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள்! நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது! இந்தியாவை வெல்வது! இது தான் சேலம் மண்ணில் நின்று இந்த நாட்டுக்கு நாம் சொல்லும் செய்தி! என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே… உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள்தான். உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக – கழகத்தின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே அரவணைத்து அணைத்துக் கொள்கிறேன். உங்களால் நான் இப்போது லட்சம் பேரின் சக்தியைப் பெற்றுவிட்டேன். சேலத்தில் சூளுரைப்போம்! சேர்ந்து எழுவோம்! இந்தியா கூட்டணி வெல்லட்டும்! அதனை காலம் சொல்லட்டும்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!” எனக் கூறினார்.