“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல்”- மு.க.ஸ்டாலின்

 
“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல்”

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம்' மாநாட்டில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி.. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி.. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல். உலகில் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்னைகள் என்றாலும் அவர்களை தேடிச் சென்று உதவி செய்வோம். வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது . அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி தவித்த 2,414 தமிழர்கள் 4 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளனர்.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் வேர்களை அடையாளம் காட்டு திட்டம்தான் இது.. இத்திட்டத்தில் தமிழ்நாடு வந்த பலர் தங்களது சொந்தங்களை கண்டுபிடித்து கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் நடந்துள்ளன.

Image

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க புதிய திட்டம் தொடங்கப்படும். அயலக தமிழர்களுக்கு தமிழ் மொழி, தமிழ் கலைகளை கற்றுக்கொடுக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். 2 ஆண்டுகளில் 100 ஆசிரியர்களுக்கு தமிழ் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து அயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என்று நான் எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலக தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை, உங்களையும் தமிழ்நாடு மறக்கவில்லை; இதுதான் தமிழினத்தின் பாசம்” என்றார்.