"எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது"- மு.க.ஸ்டாலின்
இது கரூர் அல்ல, திமுகவின் ஊர். எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொட்டும் மழையிலும் தொடங்கிவைக்கப்பட்ட கழகம் 75 ஆண்டுகளை அல்ல, நூற்றாண்டை காணப் போகிறது. கொட்டும் மழையிலும் தொண்டர்களின் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம். பொதுக்கூட்டம் என்று கூறிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு மண்டலத்தில் திமுகவின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி இருக்கிறார். வெளியே இருந்தால் தூங்க முடியாது என்று சிலர் செந்தில் பாலாஜியை சிலர் முடக்க பார்த்தனர். தான் எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுபவர் செந்தில் பாலாஜி.
14 வயதில் கருப்பு, சிவப்பு கொடி பிடித்து கழகத்துக்காக உழைக்க தொடங்கினேன். ஓயாமல் உழைக்கின்ற தொண்டர்களை சந்திக்கும்போது எனக்கு புது தெம்பு வந்துவிடும். நாடே திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி என்னை முதலமைச்சராக்கியது நீங்கள்தான். இது கரூர் அல்ல, திமுகவின் ஊர். எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. சென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கியபோதும் மழை கொட்டியது” என்றார்.

