“ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்”- மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.362.77 கோடியில் மதிப்பிலான, முடிவுற்ற 1,073 திட்ட பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறும் ஆளுநர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளைப் பார்த்து பாஜக ஆளும் மாநிலங்களில் போய்தான் கம்பு சுற்ற வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக பேசிவரும் ஆளுநரை வைத்து பாஜக தனது இழிவான அரசியலை செய்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம்தான் முதலில் உள்ளது. திராவிட மாடல் அரசுதான் இந்தியாவுக்கான திசைகாட்டி. ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். திமுக ஆட்சி மீது ஆளுநர் ஆர்.என்.ரவி வதூறுகளை பரப்பிவருகிறார்.  தமிழ்நாட்டின் கல்வி, சட்டம் - ஒழுங்கு பற்றி இல்லாததை கூறுகிறார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. பள்ளிக் கல்வியில் இந்தியாவிலேயே 2வது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது.  தமிழ் தாய் வாழ்த்தை மதிக்காதவர் ஆளுநர் ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்கிறார். ஆளுநர் ரவி தமிழகத்தில்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்துக் கொள்வார்.

அரூர் வருவாய் வட்டத்துடன் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் இணைக்கப்படும். ஒகேனக்கல் அருகே 28 கி.மீ.தொலைவு சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்படும். நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும். அரூர் நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.  விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம். வீட்டிலேயே இருந்தபடி, ஆன்லைனில் விண்ணப்பித்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் வரவு வைக்கப்படும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை திமுக ஆட்சிதான் கொண்டு வந்தது” என்றார்.