கட்டி முடிக்காத கோயிலை திறந்து நாட்டு மக்களை திசை திருப்ப பாஜக முயற்சி- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிமைக்குரல், பாதை மாறா பயணம் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டி.ஆர்.பாலு பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானல் பாலு ஒரு சுறுசுறுப்பான மனிதர். பாலுவிற்கு 80 வயதாகியும் இன்னும் திமுக கட்சியிலே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பாலு 13 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்து பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்துள்ளார். என்னையும், டி.ஆர்.பாலுவையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சை 17 வயதில் கேட்டு அரசியலுக்கு வந்தவர் டி.ஆர்.பாலு.

பாஜக-வை வீழ்த்தி I.N.D.I.A கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடிய புத்தகத்தை டி.ஆர்.பாலு எழுதியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சியில் யார் அமர கூடாது என்பதற்கான தேர்தல். நாட்டு மக்களை காக்க நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நுழைகிறோம். கட்டி முடிக்காத கோயிலை திறந்து நாட்டு மக்களை திசை திருப்ப பாஜக முயற்சி. கலைஞரின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம், அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்தி இருந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்திருக்கும்” என்றார்.