"நீட் விலக்க முடியாத தேர்வல்ல"- அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையப்போவதில்லை. சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை 2006ம் ஆண்டு கலைஞர், சட்டம் மூலம் ரத்து செய்தார். இதனால், கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. நீட் நுழைவுத் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கி வருகிறது. நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியாத தேர்வு அல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வின்றி நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும். நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையப்போவதில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தான் அனைத்து கட்சி கூட்டம். நீட் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் போராட்டம் எந்த வகையிலும் முடிவுக்கு வரவில்லை” என்றார்.