“விருது தொகையை கூட அரசுக்கே திருப்பி அளித்தார்”- நல்லகண்ணுவை பாராட்டிய மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நல்லக்கண்ணு நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை. நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதுதான் எனக்கு கிடைத்த பெருமை. தந்தை பெரியாருக்கும், தலைவர் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணு ஐயாவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை தாண்டி நமக்கு வழிகாட்டிவருகிறார். தோழர் நல்லக்கண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய வாழ்த்து இல்லை. 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர் நல்லகண்ணு.
பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார் நல்லகண்ணு. உழைப்பால் கிடைத்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அம்பேத்கர், தகைசால் தமிழர் விருது பரிசுத் தொகையை கூட தமிழக அரசுக்கு திருப்பி அளித்தார். உயர் நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட் உடனான நட்பு தேர்தல் அரசியலைத் தாண்டிய கொள்கை நட்பு. திமுக உருவாகவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்திருப்பேன் என்று கருணாநிதி கூறினார்” என்றார்.