கோவை செல்வராஜ் திமுகவை பலமுறை திட்டியிருக்கிறார்; ஆனால் அவர் மீது கோபமில்லை- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

கோவையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, தேமுதிக, அமமுக, மநீம கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய கோவை செல்வராஜ் அவர்கள் எப்படிப்பட்ட செயல்வீரர், எப்படிப்பட்ட பேச்சாளர், தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் எப்படி ஆற்றலோடு பங்கேற்பார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் அதிமுக-வில் இருந்தபோது, தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் பங்கேற்கிற காட்சிகளையெல்லாம் நான் அடிக்கடி பார்த்தவன். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போது பல்வேறு அதிமுக-வைச் சார்ந்தவர்கள் விவாத மேடையில் பங்கேற்கிறபோது சில நேரங்களில் எனக்கு கோபம் வரும், ஆத்திரம் வரும்.

ஆனால் செல்வராஜ் அவர்கள் விவாத மேடைகளில் பங்கேற்கும்போது எனக்கு ஆத்திரமோ, கோபமோ வருவது கிடையாது. ஏனென்றால் உள்ளொன்று வைத்துக்கொண்டு அவர் வெளியில் ஒன்று பேசுவது என்று இல்லாமல் வெளிப்படையாக எதையும் பேசக்கூடியவர். அவர் சொல்லக்கூடிய வாதத்தை அழுத்தமாகப் பேசக்கூடியவர். சில நேரங்களில் நம்மைத் திட்டிப் பேசியிருக்கிறார். வைரத்தை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும் என்பதைப்போல நம்மைத் திட்டத் திட்டத்தான் இன்று நாம் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறோம். பேசுகிறபோது அவரே சொன்னார்,

mkstalin

 கிலுகிலுப்புக்காரன் ஏமாற்றி தாய்க்கழகத்திடமிருந்து எங்களைப் பிரித்து அதற்குப் பிறகு உண்மை என்ன என்பதையறிந்து புரிந்து இன்றைக்குத் தாய்க்கழகத்திற்கு தாயைத் தேடி வந்திருக்கிறோம் என்று சொன்னார், அதுதான் உண்மை. இன்றைக்குத் தாயைத் தேடி வந்திருக்கும் அவரை மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து வந்திருக்கும் அவரை நம்பி வந்திருக்கும், அவர்மீது நம்பிக்கை வைத்து வந்திருக்கக்கூடிய உங்களைத் தாயுள்ளத்தோடு மீண்டும் ஒரு முறை நான் வருக, வருக, வருக என்று வரவேற்க விரும்புகிறேன். மதக் கலவரம் செய்து ஆட்சியை வீழ்த்த கனவு காண்கிறார்கள். 

கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க அவர்களிடம் துணி பெற்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த கட்சி திமுக. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவி செய்துவருகிறது. ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்” என்றார்.