"நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை"- மு.க.ஸ்டாலின்
இன்று (22-12-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை! இமயமலை போன்ற தலைவர்களில் இருந்து எத்தனையோ பேர் நம்மை எதிர்த்திருக்கிறார்கள். எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருக்கிறது.ஏன் என்றால், இது எப்போதும் மக்களோடு இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் மமதையில் ஆடவும் மாட்டோம்; தோல்வி அடைத்துவிட்டால் துவண்டு உட்கார்ந்துவிடவும் மாட்டோம்!
நம்முடைய பெரிய பலமே, நம்முடைய கட்சி அமைப்புமுறைதான்! பேரறிஞர் அண்ணா உருவாக்கி, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த அமைப்பு முறை நம்முடையது! அதனால்தான், தலைவர் கலைஞர் உறுதியாகச் சொன்னார்: “இந்தக் கருணாநிதியின் கதை முடிந்தாலும் தி.மு.க.வின் கதை முடியாது. அந்தளவுக்குத் தி.மு.க.வின் உட்கட்டமைப்பு மிக வலிமையானது” என்று சொன்னார். அதனால்தான் எத்தனையோ முறை நம்முடைய இனப் பகைவர்கள் “ஒழிந்தது தி.மு.க” என்று குதூகலமாக எழுதியபோதும், அப்படி சொன்னவர்கள்தான் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழியவில்லை! இன்றைக்கு வரை தமிழ்நாட்டின் முதன்மையான இயக்கமாக – இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கண்ட ஒரே மாநில அரசியல் கட்சியாக - அதே வலிமையோடு, வீரியத்தோடு இருக்கிறோம்!
இப்போது நாம் அமைத்திருக்கும் “திராவிட மாடல்” ஆட்சியும், எளிதாக அமைந்துவிடவில்லை! நடுவில் பத்தாண்டுகள் நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது? ஒருமுறை எதிர்க்கட்சியாக கூட வரவில்லை! சோர்ந்துவிட்டோமா நாம்? வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்துவிட்டோமா? இல்லையே! ஒவ்வொரு நாளும் மக்களுடனே இருந்தோம்! மக்களுக்காகக் குரல் கொடுத்தோம்! வீதி வீதியாக - வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்! வீதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடினோம்! புயல் – வெள்ளம் என்று எந்தப் பாதிப்பு வந்தாலும், முதல் ஆளாக ஓடிச்சென்று மக்களுக்கு உதவினோம்! இன்னும் பெருமிதத்தோடு சொல்ல வேண்டும் என்றால், கொரோனாவில் உலகமே முடங்கியபோது, வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடந்தபோது, லாக்டவுன் நேரத்திலும் மக்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து - அவர்கள் வீடு தேடிச் சென்று உதவி செய்த ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான். அதைச் சாதித்துக் காட்டியது உடன்பிறப்புகளான நீங்கள்தான். நாம் ஒவ்வொரு வீடாகத் தேடிச் சென்று கொரோனா நேரத்திலும் நிவாரண உதவிகள் செய்தோம். பதவிக்காகக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், கடுமையான உழைப்பால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறோம்!
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நாள்தோறும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்தி வருகிறோம்! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, தோழி விடுதி என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடும் அளவிலான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்!அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்று ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்! நான் சவால்விட்டுச் சொல்கிறேன்... இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இவ்வளவு திட்டங்களை, இந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறதா? நிச்சயம் கிடையாது!ஆளுங்கட்சியாக வந்ததில் இருந்து, கொரோனா, மழை வெள்ளம் என்று எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு மக்களைக் காப்பாற்றி இருக்கிறோம். ஒரு நாள்கூட ஆளுங்கட்சியாக நாம் ’ரிலாக்சாக’ இருந்ததில்லை! எவ்வளவு நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம். பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டில் இருந்து மீட்டெடுப்பதே நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டை எப்படியெல்லாம் பின்னுக்குத் தள்ளலாம் என்று யோசித்து அனைத்து வகையிலும் நெருக்கடி தரும் பா.ஜ.க.வை சமாளிக்கிறோம்!
வெறும் தமிழ்நாட்டோடு நம்முடைய எல்லையைச் சுருக்கிக் கொள்கிற மாநிலக் கட்சி அல்ல தி.மு.க.! இந்தியா முழுவதும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதற்காகவும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்! இப்படி கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் நமக்கு உற்சாகத்தைத் தருவது எது? தொடர் வெற்றிகள்தான்! அந்த வெற்றிக்கு காரணம், தமிழ்நாட்டு மக்களும், நம் கூட்டணி கட்சித் தோழர்களும்தான்!2019-இல் கொள்கைக் கூட்டணியாக சேர்ந்தோம்; தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் வெற்றிதான்! இந்த வெற்றிகள் மூலம் என்ன செய்கிறோம்? நாடு - நாட்டு மக்கள் – நாட்டின் பன்முகத்தன்மை – நம் மொழி, பண்பாடு – மதச்சார்பின்மை - இவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டம் – இதையெல்லாம் காக்கும் ஜனநாயக அரணாகத் தொடர்ந்து செயல்படுகிறோம்! அதனால்தான் இந்த கொள்கைக் கூட்டணிக்கு எதிராகப் பலரும் அரசியல் கணக்கு போடுகிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன்... நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும்! வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத்தான்.
நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்! தலைவரே சொல்லிவிட்டார்... வெற்றி சுலபமாக வந்துவிடும் என்று யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது! 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எளிமையாக வராது! அதற்கு, இங்கு இருக்கும் அனைவரும் ஒரு உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்! “200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது” என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார்.