கொரோனாவைவிட கொடியது பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

இந்துக்களின் எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம். பாஜகவின் திசைதிருப்பும் முயற்சி இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா.. என்ற இறுமாப்பில் நான் இங்கு நிற்கிறேன்.. தமிழகம் எத்தனையோ மொழிப்போர் களங்களை கண்டுள்ளது. 12 வயதில் இந்தி திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் கருணாநிதி. தாய்மொழிக்காக உலகத்தின் எந்த மூலையிலும் தமிழகத்தை போன்று போராட்டம் நடைபெற்றிருக்காது. தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற இறுமாப்புடன் நிற்கிறேன். இன்று உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம்வர இருமொழிக்கொள்கைதான் காரணம்.

இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே ஒன்றிய பாஜக அரசு இந்தியை திணிக்கிறது. ஏனென்றால் பாஜகவுக்கு வாக்களிப்பது வடமாநில மக்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒன்றிய பாஜக அரசு. கொரோனா ஊரடங்கின்போது, இந்தி பேசும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து வசதியைக்கூட ஒன்றிய அரசு ஏற்பாடு செய்யவில்லை. கொரோனாவைவிட கொடியது பாஜக அரசு. 

ராமர் கோயிலை வைத்து வட மாநில மக்கள் வாக்கை கவர நினைக்கிறது பாஜக. இந்த முறை வட மாநிலங்களில் பாஜக தோல்வியடையும். பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்தவர் பழனிசாமி, நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழையவிட்டவர் அவர்தான். தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி திணிப்புக்கு உதவியவர்” என சாடினார்.