“வெட்டிப் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை; என் ஒரே இலக்கு மக்கள்தான்”- மு.க.ஸ்டாலின்

கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 386 கோடி மதிப்பில் 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்பொழுது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திட்டக்குடி விருத்தாசலம் பகுதியில் வெளிங்க்டன் ஏரி 130 கோடி செலவில் பலப்படுத்த நடவடிக்கை,35 கோடி மதிப்பில் கடலூர் மாநகராட்சி மேம்படுத்துதல், பண்ருட்டியில் 15 கோடி மதிப்பில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், புவனகிரி சிதம்பரம் முட்லூரில் சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை 50 கோடி மதிப்பில் மேம்பாடு, குறிஞ்சிப்பாடியில் 6 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி 63 கோடி மதிப்பில் மேம்பாடு கடலூர் வட்டத்தில் பருவ மழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் நடவடிக்கை எடுக்கப்படும்.
லட்சியவாதிக்கு கொள்கை மட்டும்தான் தெரிய வேண்டும், வெட்டிப் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. என் ஒரே இலக்கு மக்கள்தான். நிதியை தராமல் மத்திய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது. கல்வியில் அரசியல் செய்வது நீங்களா அல்லது நாங்களா? மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி செலவிடுவது நாங்கள். மதவெறி, சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு நிதி செலவிடுவது நீங்கள்... சமூக நீதியை சிதைக்க தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படுகிறது. தேன் கூட்டிற்குள் கையை விடாதீர்கள் இது! என் கடுமையான எச்சரிக்கை” என்றார்.