“என்னுடைய முதல் சிறை அனுபவமே ‘மிசா’தான்”- நம்பி நாராயணனிடம் பகிர்ந்த மு.க.ஸ்டாலின்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Vibe with mks என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மிசாவில் உங்களை கைது செய்தார்களா? என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1976 ஜனவரி மாதம் மிசா வழக்கில் என்னை இரவோடு இரவாக கைது செய்து அழைத்து சென்றார்கள். அதுதான் என் முதல் சிறை அனுபவம். அப்போதெல்லாம், சிறுநீருக்கு ஒரு பானை, குடிநீருக்கு ஒரு பானை. இருவர் மட்டுமே இருக்கக்கூடிய அறையில், நாங்கள் 9 - 10 பேர் இருந்தோம். மிசாவில் என்னை கைது செய்து தொழு நோயாளிகள் இருக்கும் அறையில் அடைத்து வைத்தனர். 2 பேர் தங்க வேண்டிய அந்த அறையில் 9, 10 பேரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். திமுகவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கையெழுத்து கேட்டு தினமும் இரவில் அடித்து சித்தரவதை செய்வார்கள் என தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
நம்பி நாராயணன் அவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கச் செல்வதற்கு முன்பு அண்ணாவைச் சந்தித்திருக்கிறார். அப்போது அண்ணா அவரிடம், "நீ அங்கே எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள், ஆனால் அங்கேயே தங்கிவிடாதே. உன் அறிவை நம் நாட்டுக்காகப் பயன்படுத்து" என்று கூறியதாகப் பெருமையுடன் குறிப்பிடுவார். ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தேசப்பற்றும், அறிவியலின் மீதான ஆர்வமும் அண்ணாவிடம் இருந்ததை நம்பி நாராயணன் நினைவுக்கூர்ந்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பல சவால்களுக்கு மத்தியிலும் அண்ணா எடுத்த துணிச்சலான முடிவுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதாக கூறிய நம்பி நாராயணன், குறிப்பாக, மாநில சுயாட்சி மற்றும் மொழிப்பற்று ஆகிய விஷயங்களில் அண்ணாவின் அணுகுமுறை ஒரு சிறந்த நிர்வாகிக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும், அண்ணா காட்டிய எளிமை நம்பி நாராயணனை மிகவும் கவர்ந்தது. பெரிய பதவியில் இருப்பவர்கள் எப்படி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாவே மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் மு.க.ஸ்டாலினிடம் புகழ்ந்துள்ளார்.


