நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா?- ஈபிஎஸ்க்கு மு.க.ஸ்டாலின் சவால்

நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் வரவில்லை. ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தனர். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?
நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளம் திமுக ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இந்த மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு நன்மை செய்வதற்கு முதலாவதாக இருக்கக் கூடியவர்கள் நாங்கள்தான். உங்களுக்கு துன்பம் வரும்போது ஓடோடி வந்து துயர் துடைக்க கூடியவர்களும் நாங்கள்தான். 2009-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது துணை முதலமைச்சராக இருந்த நானே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நேரடியாக நீலகிரிக்கு வந்தேன். நமது அரசின் முத்திரை திட்டமான 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' மலை பிரதேசமான நீலகிரியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் செல்லாத பழங்குடியினர் இருக்கும் இடத்துக்கு கூட நம் அரசின் இந்த திட்டம் சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து 5 லட்சத்து 97 ஆயிரம் பேரின் வீடுகளுக்கே சென்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.