"மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தயாராக உள்ளோம்"- மு.க.ஸ்டாலின்

அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்றைக்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விளக்கங்களை இந்தத் துறையின் அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறோம். அதற்காக தான் உங்களை அழைத்திருக்கிறோம்.
• தமிழ்நாடு இன்றைக்கு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்! அதாவது, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றிருக்கக்கூடிய 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்து இன்றைக்கு நாங்கள் அவர்களுக்கெல்லாம் கடிதம் அனுப்பயிருக்கிறோம். எதற்கு என்று கேட்டால், தொகுதி மறுசீரமைப்பு விஷயமாக.
• தொகுதி மறுசீரமைப்பு என்கின்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எதற்காக சொல்கிறேன் என்றால், அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும், முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது! இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
• ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறார்கள். பொதுவாக இவையெல்லாம், மக்கள் தொகையை கணக்கிட்டுத் தான் செய்யப்படுகிறது.
• மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது! அது எல்லோருக்கும் தெரியும். பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் நாம் இதை சாதித்திருக்கிறோம்!
• மக்கள்தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 8 மக்களவை தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.
இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தீர்கள் என்றால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும்! நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! இதனால் தமிழ்நாட்டினுடைய குரல் நசுக்கப்படுகிறது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைக்க முதல் கட்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைத்துக் கட்சிகளும், கட்சிகளை எல்லாம் மறந்து, அரசியல் எல்லாம் கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று உங்கள் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்சனை, மாநில அரசுக்கு தரவேண்டிய நிதிப் பிரச்சனை, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நீங்கள் கேட்கின்ற மும்மொழிக் கொள்கை பிரச்சனைக்கும் சேர்த்து தீர்வு காணவேண்டும் என்றால் நம்முடைய எம்.பி-க்கள் எல்லாம் அதிகமாக இருந்தால் தான் குரல் கொடுக்கமுடியும். அதுதான் முக்கியத்துவம். அந்த அடிப்படையில்தான் கூட்டம் கூட்டப்படுகிறது. ஒன்றிய அரசிற்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கு ஒன்றும் பதில் கிடைக்கவில்லை. அமைதியாக தான் இருக்கிறார்கள்” என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் step எடுத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனாலும் கூட தொய்வு அடைந்தது போல இருக்கிறது. ஏன் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக-வை வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவும் இதில் நிச்சயமாக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.