”வெளியில் சொன்னால் ஈபிஎஸ்க்கு அவமானம்”- மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கை, மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தட பணிக்கான நிதி தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமெரிக்காவில் இருந்த 17 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ரூ.7,618 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகள் 100க்கு 100% நிறைவேற்றப்படும். விரைவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றபோது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம். நான் அமெரிக்கா செல்லும் முன் வெளிநாட்டு பயண முதலீடுகள் குறித்து விளக்கி உள்ளேன். தொழில்துறை அமைச்சரும் விளக்கி உள்ளார். சட்டமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. ஈபிஎஸ் அதனை படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, மெட்ரோ ரயில் 2ஆம் வழித்தட பணிக்கான நிதி தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மது ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். அதற்குமேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.