கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
mks-talin-4

கள்ளச்சாராய விற்பனை மற்றும் உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல் என்பவர் சற்று நேரத்திற்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனிடையே கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிகிச்சை பெற்றுவரும் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு (60) பெருங்கரணையை சேர்ந்த அஞ்சலை (38), முத்து (60), மற்றும் அமாவாசை ஆகியோரை நேரடியாக பார்வையிட்டு அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை முதல்வரிடம் அறிவுறுத்தினார். 

ttnt

இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் பாட்டில்களில் மெத்தனால் எரிசாராயத்தை ஊற்றி விற்பனை செய்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கள்ளச்சாராய விற்பனை மற்றும் உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்” எனக் கூறினார்.