டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின்
டெல்லியின் ஆணவத்தையும் அதற்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23-ம் தேதி ஒன்று சேர்ந்து வீழ்த்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களவை தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு (33%) மசோதா தோல்வி அடைந்தது. அரசமைப்பு சட்டத்தின் 131இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா நிறைவேற பதிவான 489 வாக்குகளில், 3இல் 2 பங்கான 326 வாக்குகள் தேவை எனும் நிலையில் 278 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வியடைந்ததது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 297 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கூட தொகுதி மறு வரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் 278 வாக்குகள் என்பது தான் பதிவாகி இருக்கிறது. எனவே பாஜகவின் கூட்டணியில் உள்ள கிட்டத்தட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தொகுதி மறு வரையறை மசோதா நிராகரிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை தீர்மானம் தோல்வி... இந்த வெற்றி சும்மா டிரெய்லர் தான். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். டெல்லியின் ஆணவத்தையும் அதற்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23-ம் தேதி ஒன்று சேர்ந்து வீழ்த்துவோம். டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. நமது தொகுதிகள் அதிகரிக்கும் என்பதுபோல் கூறி தொகுதிகள் குறைக்கவே வேலை பார்க்கின்றனர். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா என்னை அவமதிப்பதுபோல பேசியுள்ளார். அவர் என்னை அவமதிப்பு செய்யவில்லை, தமிழ்நாட்டை அவமதிப்பு செய்துள்ளார்” என்றார்.


