BREAKING பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்தி 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 248 நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி 25 ரூபாய் விலையில் கொள்முதல் செய்ய 55.72 கோடி, ஒரு கிலோ சர்க்கரை 48 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்ய 108.22 கோடி, ஒரு முழு கரும்பு 38 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்ய 84 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


