"Good things take time என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

 
MKstalin MKstalin

திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும்போது திமுக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல், திராவிட அரசு இயல் முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. 

நூல்கள் வெளியிட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக திகழ்கிறது.  திமுக என்றாலே போராட்டம், சிறை, தியாகம். 6வது முறையாக திமுக ஆட்சிக்கு வர காரணம் தொண்டர்கள்தான். காலங்கள் மாறுகிறது, எதிரிகளும் மாறுகிறார்கள். ஆனால் திமுக மட்டும் கம்பீரமாக நிற்கிறது. திமுக ஆட்சி அனைவருக்குமான ஆட்சியாக செயல்படுகிறது. 30 விநாடி ரீல் வீடியோவை கூட முழுவதுமாக பார்க்க முடியாமல், இந்த அடிக்‌ஷனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். 

Good things take time என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புத்தகம் என்பது அறிவானது, புத்தகத்தை அலமாரியில் வைக்காமல் தினந்தோறும் படியுங்கள்.  ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும். வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைக்க முடியாது. திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும்போது திமுக ஆட்சிக் கட்டிலில் இருக்கும். நம்மை எப்படி குறை கூறுவது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது. ஆதிக்கவாதிகளுக்கு அடிமை சேவகம் செய்வோருக்கு திமுக என்றாலே கசக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.