8,652 அடி உயர தொட்டபெட்டா சிகரத்தை மனைவியுடன் கண்டுகளித்த மு.க.ஸ்டாலின்
தொட்டபெட்டா காட்சிமுனையை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலை நோக்கி வழியாக உதகை நகரின் இயற்கை அழகையும், கேத்தி பள்ளத்தாக்கையும் பர்த்து ரசித்தார்.

5 நாள் சுற்று பயணமாக உதகைக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிட்டு யானை பாகன்கள் மற்றும் காவடிகளுக்கான மாவுத் கிராமத்தையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று காலை உதகையில் நடை பயிற்சி மேற்கொண்ட அவர் கோடைகால சிறப்பு முகாமில் விளையாட்டு பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார். பின்னர் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவர் மருத்துவக் கல்லூரிக்கும் சென்று ஆய்வு செய்து மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து இன்று மாலை உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு வந்த அவர் காட்சி முனையில் கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் உயரத்தில் உள்ள டெலஸ்கோப் மையத்தில் ஏறி அங்கிருந்து தொலைநோக்கி வழியாக உதகை நகரின் இயற்கை அழகையும், எழில் கொஞ்சும் கேத்தி பள்ளத்தாக்கு பகுதியும் பார்த்து ரசித்தார். அவருடன் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, அரசு கொறடா ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உள்ளிட்டோர் இருந்தனர்.


