சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

 
1

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றார்.

மு.க.ஸ்டாலினின் பேரனும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். அந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பட்டம் வாங்கிய பேரன் இன்பநிதியை வாழ்த்தினார். தொடர்ந்து லண்டனில் சில நாட்கள் தங்கி மு.க.ஸ்டாலின் ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், லண்டனிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு நேற்று காலை சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் லண்டனிலிருந்து துபாய் வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தாமதமாக துபாய் வந்ததால் உடனடியாக சென்னைக்கு வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.

எனவே துபாயில் சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மாலையில் துபாயிலிருந்து சென்னை புறப்படும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நேற்று  இரவு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள், தமிழக முன்னாள் அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ஒரு வார கால லண்டன் பயணத்தை முடித்துவிட்டு அதே எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார்.

தனது மகன் லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் நிகழ்ச்சியை நேரில் பார்த்து மகனை வாழ்த்துவதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் கடந்த வாரம் லண்டன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.