தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்.. பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்...

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி  வாயிலாக திறந்து வைத்தார்.  முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,  மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன்,  அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.  அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துகொள்ளும் முதல் அரசு விழா என்பதாலும்,  பல பணிகளுக்கு இடையே தமிழ்நாடு மாணவர்களின் நலன் கருதி இந்த நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கி தந்ததற்காகவும் அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

11 மருத்துவக் கல்லூரி

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு என்று கூறிய அவர்,  2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக  வெளியிடப்பட்ட திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் என்ற அவரது கனவு  இன்றைய நாள் நிறைவேறி இருக்கிறது என்றார். இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்பிபிஎஸ் இடங்களையும் மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது என்றும், இதற்கு நிதி ஒதுக்கீடுசெய்து ஆதரவு அளித்த மத்திய அரசுக்கு நன்றி என்றும் என்றும் கூறினார்.

மருத்துவக் கல்லூரி திறப்பு விழா

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இந்தச்சூழலிலும் ,  தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும்,  அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையை அடிப்படை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.  எங்களுடைய  கொள்கையே  இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதுதான் என்று குறிப்பிட்ட அவர்,  தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவால் தான் கிடைத்தது என்றார். . இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுதுவதாகவும்,  மனித வள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள  மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய  அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்றும் அவர் பிரதமரிடம்  கேட்டுக்கொண்டார்.