கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மூன்றாம் கட்ட ஆய்வு பணியாக இன்றும் நாளையும் மதுரையை மையமாக வைத்து தமிழக முதல்வர் அரசு திட்டங்களை ஆய்வு செய்கிறார். அதற்காக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடந்து முடிந்த அரசு பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறார். இதற்காக மதுரை வரும் தமிழக முதல்வர் இன்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் கட்டிட கலைக்கு எடுத்து காட்டாக திகழும் பாரம்பரிய செட்டிநாடு கட்டிடவடிவில் வண்ண வண்ண ஒளி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
கீழடி அருங்காட்சியகம்’ 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், 31 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் அற்புதமான பல்வேறு அம்சங்கள் பெற்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசின் 3 கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அமைக்க பட்டுள்ள தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கீழடி அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர்மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல்வழி வணிகம்’, ‘வாழ்வியல்’ எனும் 6 தலைப்பின் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் வகையிலும், வெளிக்கொணரும் வகையிலும், உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும், கீழடி அருங்காட்சியகம் அமையப்பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிடஒளி ஒலிக்காட்சியுடன் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது. செட்டிநாடு கட்டடக்கலையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் பண்டைய கால நதிக்கரை நாகரீக வாழ்வியலை தேடி மேற்கொண்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், தந்த பொருட்கள், மண்பாண்டங்கள், விரல் அளவு பானை, ஆட்டக்காய்கள், முதுமக்கள்தாழிகள் 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் சிற்பம், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் போன்றவை ஆகியவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.