பாஜக அரசின் புதிய ஆயுதம் "சென்சார் போர்டு" - எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின்..!

 
1 1

விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக, படத்தின் மீதான புகார்கள் பிற்போக்குத்தனமானவை என்றும், தணிக்கை வாரியத் தலைவர் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளார் என்றும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விமர்சித்திருந்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் அவசரமாக மேல்முறையீடு செய்ததால், படத்தின் ரிலீஸ் சிக்கலில் முடிந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வு, தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாகச் சாடியது. "தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதா? உங்கள் விருப்பப்படி அனைவரும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், டிசம்பர் மாதமே தணிக்கை முடிவுகள் தெரிந்தும் வழக்கு தொடர ஏன் இவ்வளவு தாமதம் என்று தயாரிப்பு தரப்பிற்குத் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

இறுதியாக, தனி நீதிபதியின் உத்தரவிற்குத் தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை எனக் கூறி வழக்கை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு குறித்துப் பதிலளிக்கத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தடையால், திட்டமிட்டபடி 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது, இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்சார் போர்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்! “ என கூறியுள்ளார்.