மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது - முதலமைச்சர் வழங்கினார்!

 
stalin

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

"சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்" என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுடன் 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.