காணாமல் போன நர்சிங் மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
கிணற்றில் மிதந்த நர்சிங் மாணவி சடலம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சௌமியா (20) என்ற நர்சிங்க் மாணவி வீட்டின் அருகாமையில் இருக்கும் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூத்த மகள் சௌமியா (20) புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் இரத்தப்பரிசோதனை குறித்த டிப்ளமோ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது தந்தை வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றில் இருந்து சௌமியாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய வடகாடு போலீசார் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றைய தினமே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாணவியின் உறவினர்களும் அவர் சமூகத்தைச் சார்ந்திருப்பவர்களும் மாணவி சௌமியா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவி சௌமியாவின் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தற்போது மாணவி இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவிலேயே மாணவி உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என்றும், இவ்விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாணவியின் உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட மாணவி சௌமியாவின் உடலை பெறாமல் 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தவுடன் உடலை பெற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சௌமியாவின் உயிரிழப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் உயிரிழந்த சௌமியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பெயரளாக பரவி வருகிறது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் எக்ஸ் தளத்தில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சௌமியாவின் தந்தை தனது மகளை காணவில்லை என்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்ததாகவும் பெண் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்ம் அவரது வீட்டில் அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்து சௌமியாவின் சடலம் வைக்கப்பட்டதாகவும் சௌமியாவின் உடலில் உள் காயமோ வெளிக்காயமோ இல்லாத நிலையில் மருத்துவரால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறப்பின் காரணத்தை அறிய வேதியியல் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் டையாட்டம் அறிக்கை, ஹிஸ்டோ பேத்தாலாஜிக்கல் அறிக்கை பெற வேண்டியது உள்ளது என்றும் மேலும் உயிரிழந்த சௌமியா மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும் பின்னர் சொந்த காரணங்களுக்காக இருவரும் பிரிந்த நிலையில் அந்த மன அழுத்தத்தில் சௌமியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் எக்ஸ் வலைதளத்தில் உயிரிழந்த சௌமியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது ஆதாரமற்றது,இதுபோல் பொய்யான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.