ஓசூர் அருகே தந்தங்களுக்காக யானையை வேட்டையாடிய மர்மநபர்கள்

 
Elephant

ஓசூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் நேற்று வனப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது சுமார் 15 -16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்து இருப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் வன அலுவலர் கார்த்திகையானி தலைமையில் ஓசூர் வனக்கோட்ட வனக் காவல் நடை உதவி மருத்துவரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆண் யானையின் இறப்பு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இறந்த யானையின் உடலிருந்து தந்தங்கள் இரண்டும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர். யானையை சுட்டுக் கொன்றவர்கள் அருகில் உள்ள விவசாயிகளா அல்லது தந்ததிற்காக சுடப்பட்டதா என அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யானையின் உடலில் இருந்து 2 தந்தங்களும் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தந்தங்களுக்காக யானையை வேட்டையாடிவர்கள் யார்? என வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.