பூஜை செய்தால் பேசும் அதிசய சாமி சிலை! விலை ஒரு கோடிதான்... பலே மோசடி கும்பல் கைது

இருடியம் மேசடி, கோவில் கலசம் மோசடி, பணம் இரட்டிப்பு என பல மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தேனியில் பேசும் சுவாமி சிலை என விநோத மோசடி அரங்கேறியுள்ளது.
தேனி அல்லிநகரத்தை அடுத்துள்ள சுக்குவார்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆண்டவர் (47). கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள இவர் தனது இருசக்கர வாகனத்தை பழனிச்செட்டிபட்டி யில் உள்ள தனியார் மெக்கானிக் ஷாப்பில் பழுது பார்த்து வந்துள்ளார். அந்த மெகானிக் ஷாப்பில் பணியாற்றி வரும் மதுரை மாவட்டம் ஆ.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவா, ஆண்டவரின் தனது நண்பர் தங்கமணி என்பவரிடம் ஒரு கோடி மதிப்புள்ள ஒரு சுவாமி சிலை உள்ளது. அந்த சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் அந்த சிலை உங்களிடம் பேசும், மேலும் உங்களுக்கு செல்வம் பெருகும் ஒரு அதிர்வலை உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ஆண்டவர் சரி அந்த சிலையை நான் வாங்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பின்னர் சிலையை வாங்குவதற்காக தனது நண்பருடன் வந்த ஆண்டவர், சிவா மற்றும் தங்கமணியை சந்தித்துள்ளார் அப்போது அவர்களுடன் மேலும் நான்கு நபர்கள் இருந்துள்ளனர். சிலையை காண்பித்து முன்பணம் கேட்டுள்ளனர், அதற்கு ஆண்டவர் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து சிலையை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை செய்துள்ளார். ஆனால் சிலை பேசவும் இல்லை எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆண்டவர் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆறுபேர் கும்பல் உன்னை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர். பின்னர் ஆண்டவர் பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்டம் ஆந்தங்கரைபட்டியை சேர்ந்த தங்கமணி (49), மதுரை மாவட்டம் ஆ.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த சிவா (29), விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த பாலமுருகன் (35), மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சம்பழகு (29), அறந்தாங்கியை சேர்ந்த ரவிச்சந்திரன் (52),மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (21) ஆகியோரின் பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒரு அடி உயரம் உள்ள உலோக சிலை மற்றும் 8 பச்சை நிற கற்கள் கைபற்றப்பட்டுள்ளது. பூஜை செய்தால் சிலை பேசும் என ஒரு கோடி ரூபாய் க்கு விற்பனை செய்ய முயன்று ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.