"விஜய் வேண்டுமென வடமாநில மக்கள் ஏங்குகின்றனர்"- அமைச்சர் விஜயலட்சுமி
ஆவின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, “உங்களின்(முதல்வர் விஜய்) சாதனைகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளம் மட்டுமல்ல... அனைத்து வடமாநிலங்களும் உற்று நோக்கி வருகின்றன. தளபதி விஜய்போல, எங்களுக்கும் ஓர் முதல்வர் அமையமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயின் உரையை பிறமொழிகளில் டப்பிங் செய்து மக்கள் பார்த்துவருகின்றனர். வாளால் வென்றது பிரெஞ்சுப் புரட்சி, தமிழக மக்கள் வாக்கால் வென்றது விசில் புரட்சி. பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே, தமிழக மக்களை வாட்டி வதைத்த ஊழலையும், அநீதியையும் அகற்றியது உங்களின் ஒரு விரல் புரட்சி. அதுதான் இன்றைய விசில் புரட்சி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடினார்: ‘ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’. அதுபோல தமிழக அரசு துறையில் உள்ள லஞ்சத்தை நீக்கி, தூய்மையான ஆட்சி தர வந்திருக்கும் எங்கள் அசோக சக்கரவர்த்தியே!
கடந்த ஆட்சியின் நிர்வாக குறைபாடு காரணமாக ஆவின் நிறுவனத்தின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் தற்போதைய கடன் ரூ.255 கோடியாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ.482 கோடியாக உள்ளது. விரைவில் ஆவின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முறைகேடுகள் தொடர்பாக குழு அமைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிதி நிலையை மேம்படுத்த CM விஜய் அறிவுறுத்தியுள்ளார். தனியாருக்கு நிகராக ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் பொருட்கள் வெளிநாடுகளில் விற்க நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது. ஆவின் பேக்கிங் முறைகளை நவீனப்படுத்தி விரைவில் கெட்டுப் போவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தளங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆவின் பார்லர் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர், பொதுமக்களுக்கு ஆவின் பால் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில், வணிக உரிம முறையில் (Business Franchisee) புதிய பாலகங்கள் அமைக்கப்படும்” என்றார்.

