"அரவணைக்கவும் தயார்... அடித்துத் திருத்தவும் தயார்"- அமைச்சர் விக்னேஷ் அதிரடி

 
s

சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் எங்கள் ஆட்சியில் முற்றிலும் ஒழித்துள்ளோம் என அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் விக்னேஷ், “10 ரூபாய் வாங்குவதை எப்படியாவது தடுத்துட முடியாதா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது.. அதனால்தான் 100 நாட்களில் இத்தனை மாற்றம் செய்திருக்கிறோம். திருடனை போலீஸ் பாதுகாப்போடு திருட சொன்னா எப்படி இருக்கும்..? டாஸ்மாக் பணியாளர்களை பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க இப்படி தான் தூண்டி இருக்குறாங்க. இத்தனை ஆண்டுகளாக TASMAC ஊழியர்கள் மட்டுமே தவறு செய்ததாக பொதுவான பார்வை இருந்தது… அவர்களைத் தவறு செய்யத் தூண்டியவர்களும் தவறு செய்தவர்கள்தான். பாட்டிலுக்கு அதிக விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்வதை அரசு ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரவணைத்துச் செல்லவும் தயாராக இருக்கிறோம்; தவறு செய்தால் அடித்துத் திருத்தவும் தயாராக இருக்கிறோம்.

காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 99 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்ததாக கூறினர். அந்த வகையில் அரசுக்கு மாதம் 400 கோடி வீதம், சுமார் 4800 கோடி வந்திருக்கனும். ஆனால் நாங்கள் 3 இடங்களில் ஆய்வு நடத்தியதில் 54%,57%,61% சதவீதம் மட்டுமே பாட்டில்கள் திரும்ப வந்தன. இதிலும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.