ஒன்றிய அரசுக்கு திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் வழிகாட்டுகிறது- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்கவிழா பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சென்னையில் நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா விளையாட்டை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்துவரும் முதலமைச்சருக்கு நன்றி! திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 76 புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம். பொருளாதார ரீதியாக பின் தங்கிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்துவருகிறது. மாற்றுத்திறனாளிகளான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் உதவித் தொகை அளிக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

2021 ஆண்டில் இருந்து மாநில இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்” என்றார்.