மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியதில் உடன்பாடில்லை: உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

ராமர்கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டத்தை சிம்சன் பெரியார் சிலையில் இருந்து, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை வரையிலும், சுடரை உதயநிதிஸ்டாலின் தூக்கிக்கொண்டு பேரணியாக சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இளைஞர் அணிக்கு கொடுத்த மிகப்பெரிய சவால் தான் இந்த மாநாடு. மொழி உரிமை , நிதி உரிமை , கல்வி உரிமையை கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இழந்து உள்ளோம். இதனை மீட்கவே, மாநில உரிமை மீட்பு மாநாடு என பெயர் வைத்துள்ளோம். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுக்கப்படும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பெற்ற 85 லட்சம் கையெழுத்துகள் கொண்ட படிவங்களை மாநாட்டின் போது திமுக தலைவரிடம் ஒப்படைப்போம் பின்னர் நேரடியாக நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர்கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை. கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர் தவிழ்ந்து தவிழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது” என விமர்சித்தார்.