கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவையொட்டி, அவரது உடலுக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்வித் தொண்டாற்றியவரும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தக்காருமான கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் - தியாகராசர் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் - தொழிலதிபர் திரு.கருமுத்து கண்ணன் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. கழகம் - கலைஞர் மீது பேரன்பு கொண்டிருந்த கண்ணன் அவர்களின் திருவுடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பெருமக்களுடன் மதுரையில் உள்ள அவரது வீட்டில் இன்று மரியாதை செய்து, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம். மறைந்த கண்ணன் அவர்களின் கல்வி & சமூகப்பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.