பிரதமர் மோடி இந்தியாவையே மாற்றிவிட்டார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

 
udhayanidhi-3

9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  ஜி20 மாநாட்டில் நமது நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு அந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கையின் முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

modi

இந்த நிலையில், பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகள், 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார் என கூறினார். சனாதன சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம் என கூறினார்.