பெரியாரின் கொள்கைகளை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கொண்டு சேர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின்!

 
udhayanidhi stalin

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். இன்று அவரது 145வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். 


இந்த நிலையில், பெரியார் பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈராயிரம் ஆண்டுகளாக சாத்திரம் - சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம்.  மானமும் - அறிவும் மனிதனுக்கு அழகு - சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம்.  சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.