அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக வருவார்கள்- செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக வருவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தவெக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சில நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைய தயாராக உள்ளனர். அதிமுகவின் நிலைமையை பார்த்து ஏற்கனவே 6 பேர் தவெகவுக்கு வந்துவிட்டனர். அடுத்ததாக 10 பேர் வர தயாராக உள்ளனர். மீதி உள்ளவர்கள் 6 மாதங்களில் வந்துவிடுவார்கள். மொத்தம் அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக வருவார்கள். 11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு விஜய் தான் நிரந்தர முதலமைச்சர் என்று என்ன தெரியும்? மதிமுக கட்சி போல் அதிமுக கட்சி ஆகிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். 60 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளை முதல்வர் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துவிட்டார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு சட்டப்பேரவை தலைவரிடம் சார் சார் என கெஞ்சுகிறார்கள்.
6 மாதம் கூட இந்த கட்சி தாங்குமா என்று சொன்னார்கள். தவெகவின் தலைவர் விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர். தவெக-வில் 108 பேர் வெற்றி பெற்றுவிட்டோம். ஆளுநர் 118 பேருடன் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். 47 பேரை வைத்துக்கொண்டு ஒருவர் முதலமைச்சர் என்று சொன்னால், 108 பேரை வைத்துக்கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா?தவெக-வில் 108 பேர் வெற்றி பெற்ற நிலையில் நாங்கள் 10 பேரை கொண்டு வந்தால் கதையே முடிந்துவிட்டது” என்றார்.

